~ நா.கண்ணன் source:tamil hindu
(அறிவியல், ஆன்மிகம், இலக்கியம் என்று பல தளங்களில் எழுதி, இயங்கி வரும் திரு நா. கண்ணன் தமிழ் இணைய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ என்னும் சீரிய அமைப்பினை நடத்தி வருபவர். அவரது சாதனைகள், படைப்புகள் பற்றிய குறிப்புக்களை இங்கே காணலாம். இக்கட்டுரை யுகமாயினி அக்டோபர் 2008 இதழில் வெளிவந்துள்ளது - ஆசிரியர் குழு).
உலகில் உயிர்கள் தோன்றி வளர்ந்து கிளைவிட்ட சரிதத்தை 12 மணிகள் காட்டும் ஒரு கடிகாரத்திற்கு உவமை சொன்னால், 12 மணி அடிக்கப்போகும் சில நொடிகளுக்கு முன்வரை மனிதன் பூமியில் தோன்றவே இல்லை என்பது அறிவியல் உண்மை. அதாவது அற்பக் கொசுவும், பூரானும் மனிதனுக்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றி உலகை உரிமை கொண்டாடிவந்திருக்கின்றன. இப்படிச் சொல்வதிலிருந்து உயிர்த்தோற்றம் எவ்வளவு பழமையானது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் பேசுவது போலவே கீதாச்சார்யனான கண்ணனும் பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது. யாக்கை (உயிர் நிலை) என்பதைத் தலைக்கீழாய் தொங்கும் ஒரு விருட்சம் என்கிறான் கீதையில்! மனிதத் தோற்றம்பின்னால் நிகழ்ந்த நிகழ்வு என்று சொன்னாலும் அந்நிகழ்வு பற்றிய துல்லிய காலக்கணக்கு இன்னும் விஞ்ஞானிகளுக்கு சரியாகப் புலப்படவில்லை. கிமு 25,000 ல் சமகால மனிதனின் தோற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்பது ஒரு கூற்று. சுமார் 5000 வருடங்களுக்கு முன்தான் எழுத்து என்பதே தோன்றியது என்றால் நம்புவதற்குக் கடினமாகத்தான் உள்ளது. ஆனாலும், 5000 வருடங்களே நமக்கு நீண்ட காலம்தான்.
மனிதத்தோற்றம் பற்றிய தொன்மங்கள் ஒவ்வொரு இனத்திலும் உள்ளன. ஒவ்வொரு இனமும் தாங்கள் தான் மூத்த குடிகள் என்று நம்பிவருகின்றன. உதாரணமாக, கழக ஆட்சியினால் பிரபலமாக்கப்பட்ட வசனம் “கல் தோன்றி, மண் தோன்றாக்காலத்தே முன் தோன்றிய மூத்த இனம், தமிழ் இனம்” என்பது. இப்படி மனிதத்தோற்றத்தை மிகப்பின்னுக்கு தள்ளுவது ஒரு இந்திய வழக்கம். உதாரணமாக, ஸ்ரீமத்விகனஸோத்பத்தி சரித்ரம் என்று சரஸ்வதி மகால் நூலகம் வெளியிட்ட நூல் ஒரு கணக்கு சொல்கிறது. 1728000 வருடங்கள் கொண்டு க்ருதயுகம் முடிந்தது, 1296000 வருடங்கள் கொண்டு த்ரேதாயுகம் முடிந்தது, 864000 வருடங்கள் கொண்டு த்வாபரயுகம் முடிந்தது, 5109 வருடங்கள் கொண்டு கலி நடந்துகொண்டு இருக்கிறது. இத்தனை யுகங்களிலும் மனிதன் இருந்தான் என்பது மட்டுமில்லை, நமது பிதாமகர் விகனஸ மஹாரிஷி தோற்றமுற்று இதுவரை நூற்றுத்தொண்ணூத்தாறு கோடியே, எண்பத்தைந்து லட்சத்து, மூவாயிரத்து நூற்று ஒன்பது வருடங்கள் ஆகின்றன என்றும் சரியாகச் சொல்கிறது! இது என்ன கணக்கு என்று நமக்கு இன்று புரியவில்லை எனினும் நவீன அறிவியலுக்குப் பிறகுஇப்படி கணக்குச் சொல்லும் ஒரே கலாச்சாரமாக இந்திய கலாச்சாரம் உள்ளதை கார்ல் சாகன் என்ற பிரபல வானவியல் விஞ்ஞானி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புகழ்ந்து பேசியுள்ளார்.
இப்படிப் பேசுகின்ற ஒரு நாட்டிற்கு வருகின்ற ஒரு புதிய மதம் இக்கூறுகளை தன்னுள்ளே எடுத்துக் கொள்ள முயல்வது வீம்பு அல்ல, ஒரு தற்காப்பு என்றே கொள்ள வேண்டும். உதாரணமாக இந்தியக் கிறிஸ்தவம் என்று எடுத்துக் கொண்டால், அதற்கொரு பழம்கதை சொல்லி, ‘கல் தோன்றா மண் தோன்றா’ என்று ஆரம்பிப்பது கிறிஸ்தவ சம்பிரதாயமன்று, இந்திய சம்பிரதாயம்!! இப்படித்தான் நான் முதன் முதலில் தோமையர் (செயிண்ட் தாமஸ்) பற்றிய தொன்மத்தைக் கேள்விப்பட்டேன். இதில் கூடப்பாருங்கள் தாமஸ் எனும் பெயரை எவ்வளவு அழகாக இந்தியப்படுத்தியுள்ளனர் - தோமையர். ஐயர் என்று சொல்லும் போது ஒரு உயர்வு மனதில் தோன்றும் என்பது கிறிஸ்தவம் இந்தியா வந்து கண்டறிந்த உளவியல் உண்மை. அதே போல் சமிஸ்கிருத மொழியில் கிறிஸ்தவத்தைப் பேசினால் உயர்வு என்பதும் அவர்கள் கண்டறிந்தது. பள்ளிப்பருவத்தில் “விசேஷ சுவிஷேசப்பிரசங்கங்கள்” என்பதைச் சொல்வது இருக்கட்டும், வாசிக்கவே கஷ்டப்பட்டு இருக்கிறேன். அப்படிச் சொன்னால், சொல்லப்போகும் விஷயம் மிகவும் தொன்மையானது, விசேடமானது, புனிதமானது என்பது போன்ற பிம்பத்தை இந்திய மனதில் உருவாக்கும் என்பது அவர்கள் கணக்கு. இல்லையெனில் விவிலியம் (பைபிள்) என்பதை வேதகாமம் என்று சொல்வானேன்? இலங்கையில் வேதம் வழி வந்த சைவர்கள் கிறிஸ்தவர்களை அழைப்பது “வேதக்காரர்கள்”!! இவர்கள் (இந்துக்கள்) வேதக்காரர்கள் இல்லை என்பது மறைமுகமாக மனதில் பதிக்கப்படும் உத்தி இங்கு காணத் தக்கது!
தோமையர் இந்தியா வந்தார் என்பதை வேத்திகன் ஏற்றுக் கொள்ளவில்லை. அதிலும் காரணம் இருக்கிறது. இந்தியர்கள் இப்படிச் சொன்னால் ரோமன் திருச்சபை இந்தியத்திருச்சபைக்கு பின்னால் தோன்றியது என்றாகிவிடும்! அருந்ததிராய் எழுதிய “சின்னவைகளின் கடவுள்” எனும் புத்தகத்தில் சிரியன் கிறிஸ்தவர்களின் உயர்வு மனப்பான்மையை நன்கு பதிவு செய்வார். இவர்கள் தங்களை ஆதிக்கிறிஸ்தவர்கள் என்று சொல்வது மட்டுமல்ல, இந்து சமூகத்தில் உயர் மட்டத்தில் இருக்கும் நம்பூதிரிகள் இவர்களுக்குக் கீழே! என்றும் கருதும் மனப்போக்கை இனம் காட்டுவார். ஜாதியத்தின் ஆணிவேர் இங்கு புலப்படும். ஜாதியத்தின் உளவியல் எப்படியும் ‘தன் ஜாதி’ அடுத்தவன் ஜாதியைவிட உயர்வானதாக இருக்க வேண்டும் என்பதே! உதாரணமாக இமையம் எழுதிய கோவேறு கழுதையின் மையம் தாழ்ந்த ஜாதி மக்களைப் பற்றியது. அதில் ‘இந்து வண்ணான்’ ‘கிறிஸ்தவ வண்ணானை’ விட உயர்ந்தவன் என்று காட்டப்படும்!
இதே இந்திய ஜாதி உளவியலை ஒரு சமூக-சமய உத்தியாகப் பயன்படுத்தி தோமையர் தொன்மம் சமீப காலங்களில் உருவாக்கப்பட்டு, உண்மை போல் நிருவப்படுகிறது. அதாவது இயேசு கிறிஸ்து இறந்த பின் தோமையர் இந்தியா வந்தார். இங்கு வந்து இந்திய உயர் ஜாதி நம்பூதிரிகளை கிறிஸ்தவத்திற்கு மாற்றி, பின் தமிழகம் வந்தார். அங்கு பிராமணர்களால் கொல்லப்பட்டார் என்பது உருவாகிவரும் தொன்மம். சென்னையில் உள்ள செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்பது அவர் நினைவாக வந்தது என்பதும் கதை. ஏசுவின் சரிதமே இன்னும் சரியாக, சரித்திர பூர்வமாக ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. டா வின்சி கோடு போன்ற படங்கள் கிறிஸ்தவ திருச்சபை செய்த குளறுபடிகள், பெண்வதை போன்றவற்றை பட்ட வர்த்தனமாக எடுத்துச் சொல்ல முன்வந்திருக்கின்றன. அமெரிக்கா வந்த போப்பையர் முதலில் மேற்கொண்ட செயல், பாதிரிமார்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுவர்களின் பெற்றோர்களைக் கண்டு ஆறுதல் சொன்னதாகும். காலம் மாறி வருகிறது. கிறிஸ்தவம் தன் தவறுகளை ஒத்துக் கொண்டு வருகிற இக்காலக்கட்டத்தில் இந்தியக் கிறிஸ்தவம் திடரடி நடவடிக்கையாக 2000 வருடப்பழமை கொண்டது இந்தியக் கிறிஸ்தவம் எனும் ஒரு புதிய கதையாடலை முன் வைத்து, அதை ஆராய்ச்சி பூர்வமாக நிருவ முன் வந்திருப்பது புதுமை அல்ல, புரியாத அரசியல்!
ஜெயமோகன் சமீபத்தில் பதிவாக்கிய “தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்” எனும் பதிவு என் கவனத்திற்கு நான் மட்டுறுத்தும் மின்தமிழ் குழுமத்தின் வழியாக வந்தது. “தமிழ்ச்சூழலில் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய கலாசார அழிப்பு, வரலாற்றுத் திரிப்பு சதிவேலையைப் பற்றித் தெரியவந்து அதிர்ச்சியடைந்து, இதை எழுதியிருக்கிறார் ஜெயமோகன்” என்ற குறிப்புடன்!! இது பற்றி இங்கு சிந்திப்பது முக்கியம் என்று படுகிறது.
“இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும் லெமூரியாவில். இங்கே பழங்குடிகள் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் கல்லையும் மண்ணையும் வழிபடுவதுபோன்ற மதப்பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். குமரிக்கண்டத்தில் இருந்து இவர்கள் வடக்கே பரவி வடக்கே உள்ள பிராகிருதம் போன்ற பண்படாத மொழிகளை உருவாக்கினார்கள். சிந்துசமவெளிநாகரீகம் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். இவர்கள் சிவன் அல்லது பசுபதி போன்ற கடவுள்களை வழிபட்டார்கள். பண்பாட்டுவளர்ச்சி இல்லாத ஒரு வாழ்க்கை இங்கே நிலவியது. இக்காலத்தில்தமிழர்களின் ஆன்மவியல் [soulology] வளர்ச்சியுறாத நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் வடக்கில் இருந்து வந்த சமணர்களும் பௌத்தர்களும் தமிழர்களின் நிலத்தைக் கைப்பற்றி ஆண்டார்கள். தமிழர்களின் சிந்தனையையும் அவர்கள் அழித்தார்கள். அவர்கள் கடவுளை உணரக்கூடிய ஞானம் இல்லாதவர்கள். இவர்களால் தமிழர்களின் ஆன்மவியல் முழுமையாக அழிந்தது. இக்காலகட்டத்தில் வடக்கே இருந்து வந்த அன்னியர்களான ஆரியர்கள் தமிழர்களின் பண்பட்டை அழித்து அவர்களை சாதிகளாகப் பிரித்து அவர்களை அடிமையாக்கி சுரண்டினார்கள்.
இந்நிலையில் கிறிஸ்துவின் சீடரான புனித தோமையர் [தாமஸ்] இந்தியாவுக்கு வந்துசேர்ந்தார். இவர் மேலைக்கடற்கரைக்கு வந்து அங்கிருந்து கீழைக்கடற்கரைக்கு வருகைதந்தார். அவர் கிறித்தவ ஆன்மவியலை தமிழர்களுக்கு கற்றுத்தந்தார். தமிழர்களின் தொன்மையான ஆன்மவியலில் கிறிஸ்தவத்தின் இறைச்செய்திகள் சில உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அதன் வெளிச்சத்தில் அவர் தமிழ்-கிறித்தவ ஆன்மவியலை உருவாக்கினார்.
அதை அரைகுறையாக புரிந்து கொண்டவர்களால் அந்த தத்துவ சிந்தனைகள் திரிக்கப்பட்டன. இவ்வாறு திரிபுபட்ட கிறித்தவமே சைவம்,வைணவம் என்ற இருபெரு மதங்களாக உருவெடுத்தது. இதுவே பக்தி இயக்கம் ஆகும். இந்த பக்தி இயக்கமானது பௌத்தர்களையும் சமணர்களையும் துரத்தியது
புனித தோமையர் பிராமணர்களால் கொல்லப்பட்டார். அவர் கற்பித்த தமிழ்-கிறித்தவச் சிந்தனைகள் பிராமணர்களால் மேலும் திரிக்கப்பட்டன. அவ்வாறாக சைவத்தையும் வைணவத்தையும் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆதிக்கிறித்தவ சிந்தனைகளை அவர்கள் தங்களுடைய சிந்தனைகளாக மாற்றிக் கொண்டார்கள். இதன்பொருட்டு அவர்கள் சமசுகிருதம் என்ற மொழியை உருவாக்கினார்கள். இந்தமொழியில் வேதங்கள் உபநிடதங்கள் போன்ற நூல்களை எழுதிக்கொண்டார்கள். அவற்றில் உள்ள ஞானம் கிறித்தவ ஞானமே என்று வெளியே தெரியாமல் இருப்பதற்காக அவற்றை யாரும் கற்கக் கூடாது என்று சொன்னார்கள். சாதிப்பிரிவினைகளை நிலைநிறுத்திய அன்னியர்களான பிராமணர்கள் தமிழர்களை இந்தியா முழுக்க அடிமையாக்கி வைத்திருந்தார்கள்.
தமிழர் ஆன்மவியலின் மிகச்சிறந்த நூல் சிவஞானபோதம் ஆகும். இது புனித தாமஸால் கொண்டுவரப்பட்ட ஆதி கிறித்தவ சிந்தனைகளின் சற்று குறைப்பட்ட வடிவம். இன்று இந்துக்கள் சொல்லப்படுகிறவர்கள் உண்மையில் ஆதி கிறித்தவர்களே. இந்து என்ற ஒரு மதம் இல்லை. அப்படி ஒருமதம் இருப்பதாக எந்த ஒரு அறிஞருமே சொன்னதில்லை. அது ஆரிய பிராமணர்கள் சாதிபேதங்களை உருவாக்கும்பொருட்டு உருவாக்கிய பொய். ஆகவே சைவம் வைணவம் என்ற இரு மதங்களைச் சேர்ந்த இந்துக்களை ஆதி கிறித்தவர்கள் அல்லதுதாமஸ் கிறிஸ்டியன்ஸ் என்றுதான் சொல்லவேண்டும்.”
என்று பதிவிடுகிறார் ஜெயமோகன். இம்மாதிரிக்கதைகள் இந்திய மண்ணிற்கு வருவதும் போவதும் புதிதில்லை என்று நாம் மெத்தனமாக எண்ணமுடியாத அளவிற்கு ஒரு பாரிய அரசியல் பின்புலத்துடன் இப்புதிய கதையாடல், கருத்துப்பதிவு, தொன்ம மாற்றம் நிகழ்வதாக அவர் பதிவு செய்வது கவலை கொள்ள வைக்கிறது. உதாரணமாக கிறிஸ்தவ பாதிரிகள் மெத்தப் படித்தவர்கள். குறைந்தது நான்கு மொழிப்பரிட்சயம் உள்ளவர்கள். கிறிஸ்தவ ஸ்தாபனம் என்பது உலகிலேயே மிகவும் செல்வாக்குள்ள, பணக்கார ஸ்தாபனம். ஒரு கோடி ரூபாய் என்பது அவர்களுக்கு பொறிகடலை வாங்கும் காசு. எனவே அந்தப்பலத்தை வைத்துக் கொண்டு மிகத்தேர்ந்த திட்டத்துடன், முறையாக செயல்படுவதாக ஜெயமோகன் பதிவு செய்கிறார்.
அதாவது, ஒரு கருத்தாக்கம் உருவாகும் போது அதை முதலில் எதிர் கொள்வது ஒரு சமூகத்தின் அறிவுஜீவிகளே. எனவே அவர்களை எதிர்கொள்ளுதல் முதலில் நடைபெறுகிறது. வையாபுரிப்பிள்ளையின் வழிவந்தவரான பேராசிரியர் ஜேசுதாசன் இந்தக் கருத்தமைவின் முக்கியமான தொடக்கப்புள்ளி. அவர் வழியில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் அந்த தமிழிலக்கிய வரலாற்றை எழுதுகிறார். ‘Count Down From Solomon’ எனும் நூலில் தமிழிலக்கியம் பற்றிய ஆகப்பழைய குறிப்பு சாலமோனின் பாடல்களில் வருகிறது என்றும், தோமையர் (St.Thomas) இந்தியா வந்தார் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது என்றும், திருக்குறளிலும் ஆழ்வார் பாடல்களிலும் உள்ள அறம் அன்பு பற்றிய தரிசனங்கள் கிறித்தவ விழுமியங்களுடன் ஒத்திசைந்து போகின்றன என்றும் எழுதுகிறார். இதை வெளியிட்ட ஜான் சாமுவேல், 2003ல் ‘தமிழகம் வந்த தூய தோமா’ என்ற நூலை எழுதி, ‘இந்தியச் சிந்தனைகள் அனைத்துமே தமிழகம் வந்த தோமஸால் உருவாக்கப்பட்ட¨வையே என்று வாதிடுகிறார். தோமையர் இந்தியா வந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லிவந்த வாடிகன் திருச்சபை எண்ணங்களையே இவர்கள் தங்கள் வாதத்திறமையால் மாற்றிவிட்டனர் என்பது முக்கியம். இந்த கருத்தை ஜான்சாமுவேல் மற்றும் தெய்வநாயகம் இருவரும் வெற்றிகரமாக அமெரிக்க இவாஞ்சலிஸ்டுகளுக்கு கொடுத்து ஏற்கச்செய்து, ‘இந்தியாவில் ஆதி கிறித்தவம்’ எனும் மாநாட்டை நியூயார்க் நகரில் நடத்தி அம்மாநாட்டு மலரில் ஆர்ச் பிஷப் ஆ·ப் காண்டர்பரி, செனெட்டர் ஹிலாரி கிளிண்டன், ஹெலென் மார்ஷல், பரோ ஆ·ப் குயீன்ஸ் நியூயார்க், நியூயார்க் மேயர், கவர்னர் ஜார்ஜ் படாகி போன்றோரின் வாழ்த்துச்செய்திகளையும், மலபார் சர்ச்சின் ஆர்ச் பிஷப், சிரியன் மலங்கர திருச்சபை ஆர்ச் பிஷப்,சி.எஸ்.ஐ பேராயத்தின் ஆயரின் வாழ்த்துச்செய்திகளையும் வெளியிட்டு, ஹிலாரி கிளிண்டன் நேரில்வந்து பங்கெற்குமாறு செய்துள்ளனர். இதைப்பார்க்கும் போதுதான் இப்புதிய கருத்தாக்கம் எவ்வளவு பெரிய பின்புலத்துடன் முன்வைக்கப்படுகிறது, அது நிகழ்த்தப்போகும் பின்விளைவுகள் என்ன என்று கவனிக்க வேண்டியதாய் உள்ளது.
மிகக்கவனமாக தமிழகத்தில் ஏற்கனவே உள்ள கருத்து முரண்பாடுகளை உள்வாங்கி அவைகளை ஒன்றிணைத்து இப்புதிய கருத்து உருவாகிறது. திராவிட-ஆரிய மோதல்களின் பலம் இக்கருத்து தமிழகத்தில் செல்லுபடியாகும் என்பதை அறிந்தே இக்கருத்து முன்வைக்கப்படுகிறது. புதிதாக எழுச்சியுரும் தலித்திய கோட்பாடுகள் இந்திய சனாதன மதங்களைப் புறக்கணிப்பதால் கிறிஸ்தவம் ஒரு இயல்பான மாற்றுத்தளமாக அமைய இப்புதிய கருத்தாக்கம் உதவும் என்பதும் அவர்கள் நம்பிக்கை. ஆக, வையாபுரிப்பிள்ளையின் இலக்கிய காலக்கணக்கு இவர்களுக்கு மிக சௌகர்யமான ஒரு அஸ்திவாரத்தை அமைத்துத்தர தமிழக சைவம், வைணவம் இவை கிறிஸ்தவ வேதகாமத்தின் சாயலில் உருவானவையே என்று சொல்ல வசதியாகப் போய்விட்டது. சைவப்பிள்ளையான வையாபுரியின் ஆவி இதைக்கண்டு என்ன செய்யும்? எப்படி எதிர்கொள்ளும் என்பதை நம் கற்பனைக்கு விட்டுவிடலாம்.
இந்த மாநாட்டுக்குப் பின் ஏறத்தாழ 100 கோடி ரூபாய் செலவில் தாமஸ் இந்தியா வந்தது, வாழ்ந்தது பற்றி ஒரு ஆங்கில-தமிழ் திரைப்படம் எடுக்கப்போவதாகவும் அதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட முக்கிய நடிகர்களை நடிக்கவைக்கப் போவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஜெயமோகன் எழுதும் செய்தி எனக்கு பல்வேறு ஊடகங்கள் வழியாக அறிய வந்தது. தமிழக முதல்வர் மு.கருணாநிதி இப்படத்துவக்கவிழாவில் கலந்து கொண்டதோடு வள்ளுவனின் ஆசான் தோமையர் எனச் சொல்லும் இப்படத்தயாரிப்பை வாழ்த்தியதோடு, ‘தமிழக கிறித்தவத்தின் இருபது நூற்றாண்டுப் பழமையில் பெருமை கொள்வதாகவும்’ சொல்லுகிறார். ஆக வாத்திகனின் பணபலம், செல்வாக்கு இங்கு எல்லோரையும் விலைக்கு வாங்கிவிட்டது என்று தெரிகிறது.
வாத்திகன் நகருக்கு பலமுறை போயிருக்கிறேன். அதுவொரு சாம்ராஜ்ஜியம். அவர்களுக்கென்று தனி நாணயமுள்ளது. போப்பாண்டவரின் சொல் தெய்வத்தின் சொல் என்று நம்ப உலகில் பலகோடி மக்கள் உள்ளனர். மேலும் திருச்சபைக்கும் ஐரோப்பிய அரசியலுக்குமுள்ள தொடர்பு உலகறிந்ததே. முதலாளித்துவ பின்புலமுள்ள திருச்சபையின் செயல்பாடுகள் சந்தைப் பொருளாதார பாணியிலேயே ஆன்மீகத்தையும் நடைமுறப்படுத்துவது கண்கூடு. இதைக் கண்டனம் செய்யும் குரலாகவே சமீபத்தில் நாவலாகவும் பின் திரைப்படமாகவும் எடுக்கப்பட்ட‘டாவின்சி கோட்’ எனும் படத்தைக் கொள்ளவேண்டும். ஏனெனில் ரோமன் திருச்சபை அதிகாரம் பெற்றபின் ஐரோப்பாவில் இருந்த ஆதிப்பழம் நம்பிக்கைகள் எல்லாம் முறையாக அழிக்கப் பட்டன. பண்டைய கிரேக்க, ரோமானிய மதநம்பிக்கைகள் கட்டோடு அழிக்கப்பட்டன. வட ஜெர்மனியில் காலம், காலமாக ரோமன் மேலாண்மைக்கு எதிர்ப்பு உண்டு. மார்ட்டின் லூதர் இதை ஆரம்பித்து வைக்கிறார். கிறிஸ்துமஸ் அன்று நெதர்லாந்தில் ஒரு தேவாலயத்திற்கு சென்றேன். அவர்கள் வழிபாட்டு முறைகளைக் காண. ஆனால் அன்று தேவாலயம் திறக்கப்படவே இல்லை. காரணம் வட ஐரோப்பாவில் கிறிஸ்தவத்தின் பிடி மிகக்குறைவே. மேலும் இரண்டாம் உலகப்போரில் திருச்சபை மக்களுக்குத்துணை போகவில்லை என்ற வருத்தம் பல ஜெர்மானியர்களுக்கு உண்டு.
உன்னத கிரேக்கக் கலாசாரத்தை அழித்தொழிக்கும் கிறிஸ்தவர்கள்
இதைச் சரிக்கட்டவோ என்னவோ வாடிகன் தனது ஆளுமையை ஏழை நாடுகள் மீது செலுத்தத் துவங்கியது. காலனித்துவ காலங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டவுடன் முதலில் வந்து இறங்குவது திருச்சபைப் பாதிரிமார்களே! சமகால அரசியல் தளத்தில் போர் உருவாக்கத்தில் திருச்சபையின் கைகள் உண்டு என்று நம்புவோருண்டு. போரை உருவாக்கி இறையாண்மை குறையும் போது திருச்சபையின் தூதர்கள் நற்சேதியுடன் போய் கதிகலங்கிப்போயிருக்கும் மக்களை மதம் மாற்றம் செய்வது ஒரு சர்வதேச தொழில்நுட்பமாக மாறிப்போயுள்ளது. இல்லையெனில் கொரியப் போருக்கு முன்வரை தேசிய மதமாக இருந்த பௌத்தம் இப்போது கவலை கொள்ளும் அளவில் கிறிஸ்தவம் எப்படி வேறூன்றியது? நற்சேதி கொண்டு செல்லும் தூதுவர் கோஷ்டியின் மூன்றாவது நாடாக கொரியா இப்போது மாறிப் போனது. சிதலப்பட்டுப் போயிருக்கும் ஆஃப்கான் நாட்டிற்கு கொரிய நற்சேதித் தூதுவர்கள் போய் அவர்கள் தாலிபான் கைகளில் மாட்டிக்கொண்டு அவதிப்பட்ட கதை பலருக்கு தெரிந்திருக்கலாம். இந்தியாவில் இருக்கும் அதே மனப்பான்மையை நான் கொரியாவிலும் காண்கிறேன். அதாவது புதிதாக மதம் மாறியவர்கள் ஒரு வெறியுடன் தன் மதத்தை ஸ்தாபிக்க முயல்வர். ஆனால், இந்தப் போக்கை, ‘தன்னை’ கிறிஸ்தவ நாடு என்று அறிவித்து வாழும் ஜெர்மனியிலோ, இங்கிலாந்திலோ பார்க்கவியலாது. பார்க்கப்போனால் தலாய்லாமாவிற்கு அதிக ஆதரவு ஜெர்மனியிலிருந்து வருகிறது. முன்பு பௌத்த தேசமாக இருந்த கொரியா கிறிஸ்தவ அரவணைப்பில் துயில் கொண்டுள்ளது!
ஐரோப்பியக் குடிமகனான எனக்கு வெள்ளை மக்களுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்புள்ளது. உண்மையான ஆன்மீகப்பற்றாளர்கள் என்னிடம் சொல்வது, ‘இந்தியா ஒன்றுதான் எங்கள் நம்பிக்கை! இந்தியாவே உலகின் இதயம்’ என்பது. இந்தியாவில் யோகா பிரபலமோ இல்லையோ, ஒவ்வொரு சிறு ஜெர்மன் கிராமத்திலும் யோகா உண்டு! எனக்கு கிரியா யோகா தீட்சை ஒரு தேவாலயத்தில் நடந்தது. “ஏசு கிறிஸ்து சர்ச்” என்று பெயர். இந்தியாவிலிருந்து இரண்டு யோகிகள் வந்திருந்தனர். நான் ஒருவன் மட்டும் இந்தியன். மற்ற எல்லோரும் ஐரோப்பியர்கள். ஆனால் அன்று, அங்கு நிலவிய ஒரு தெய்வீக சூழலை இந்தியாவில் கூட நான் கண்டதில்லை. ஆனால் இந்தியாவிலோ தன் சமய வேர்களைப் புரிந்து கொள்ளாமல் எளிமையாக விலை போகும் போக்குத் தெரிகிறது! சுதந்திர இந்தியாவில் விவேகாநந்தர், பாரதி போன்றோர் எழுப்பிய அறிவுப்பசி நீர்த்துவிட்டது. மொழி வளம் என்பது போய் மொழி வெறி வந்தது. சமயப் புரிதல் என்பது போய் சமயவெறி வந்தது. ‘வந்தே மாதரம்’ என்பது போய் ‘மாநில சுயாட்சி’ வந்தது. கால்டுவெல் கருத்தாக்கம் நிரந்தரமாக தமிழ் உளவியலை மாற்றி விட்டது. இத்தகைய குழம்பிய சூழல் புதிய கிறிஸ்தவ கருத்தாக்கத்திற்கு துணை போவதாய் உள்ளது.
இயேசுவின் சரித்திரத்திரமே இன்னும் ஊர்ஜிதமாகவில்லை. ஆனால் இவர்கள் தோமையர் தொன்மத்தைக் கொண்டு வருகிறார்கள். எப்போதோ பார்த்த ஒரு இத்தாலிய திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது. அதில் இயேசு இறந்த சில வருடங்களில் அவர் கதை கேட்டு ஆர்வமுற்ற ஒரு ரோமானிய இளைஞன் ஜெருசலேம் வருவதாகக் கதை. எவ்வளவோ தேடியும் அவனால் இயேசு என்ற ஒருவர் இருந்ததற்கான தடயத்தைக் கண்டுபிடிக்கமுடியாது. ஆனால் மூடுமந்திரமாக அவர் பற்றிய ஒரு தொன்மம் இருப்பதை மட்டும் அவனால் உணரமுடியும். தொன்மங்கள் சரித்திரத்தைவிட பலமானவை. ஏனெனில் அது நம்பிக்கை சார்ந்தது. மனது சார்ந்தது. இதன் பலம் அறிந்துதான் இந்தியாவில் புராணங்கள் எழுப்பப்பட்டன. புராணங்களுக்கு ‘உபவேதம்’ எனும் சிறப்புக்கூடக் கொடுக்கப்பட்டது. கல்வியில் சிறந்த கிறிஸ்தவப் பாதிரிகளுக்கா இது புரியாது? அதே வழியில் அவர்கள் தோமையர் தொன்மத்தை உருவாக்கி, அதை உண்மை என்று மெல்ல, மெல்ல நிறுவ முற்படுகின்றனர்.
இது நாம் வெள்ளையரிடமிருந்து கற்ற பாடம்! இந்தியாவில் மேலாண்மை செலுத்த வேண்டுமெனில் முதலில் அங்குள்ள கற்றோருக்கு மயக்கம் தரும் வழிமுறைகளைக் காட்ட வேண்டும் என்பது ஒரு ஆங்கில உத்தி. அதன்படி, சமிஸ்கிருதத்திற்கு ஒப்பாக ஆங்கிலத்தை அவர்கள் முன்வைத்தபோது நம்மவர் மதுவிற்கு பழக்கப்படும் பதின்மன் போலும் முதலில் ஆர்வம் காரணமாக ஈர்க்கப்பட்டு பின் ஆங்கில மொழிக்கே அடிமையானோம். என்று சமிஸ்கிருதக் கல்விமுறை தடை பட்டதோ அன்றே நம் வேருடன் கூடிய பரிட்சயம் நமக்கு விட்டுப் போனது. அடுத்த உத்தி, இந்தியாவிலிருக்கும் செம்மொழிகளுக்குள் பிணக்கை உருவாக்குவது. அதைக் கால்டுவெல் செய்தார். அதன் தாக்கம், வளர்ச்சி, நிலைப்பாட்டை நாம் நன்கு அறிவோம். இரண்டு மொழிகளுக்குமுள்ள பனிப்போர் தமிழகத்தை பொது ஓட்டத்திலிருந்து கத்தரித்துவிட்டது. இப்போது இரண்டு மொழிகளுமே ஆங்கில மேலாண்மைக்கு முன் அடிபணிந்தே நிற்கின்றன. இக்கருத்தாக்கத்தால் தமிழ்மொழி வளம் பெற்றிருந்தால் தேவலை. ஆனால் மொழி வளம் என்பதை விடுத்து மொழிவெறியே வளர்த்தெடுக்கப் பட்டுவிட்டது இங்கே!
இதனுடைய ஒரு நீட்சியாகவேதான் தமிழ்ப்பாதிரிகளின் இச்செயல்களை நான் காண்கிறேன். உண்மையான தமிழ்ப்பிடிப்புள்ள ஒரு தமிழன், தமிழின் வேர்களை சொந்த மண்ணில் தேடுவானே தவிர வேற்று மண்ணில் தேடமாட்டான். லத்தீன் அமெரிக்கப் பாதிரிகள் கிறிஸ்தவத்தை லத்தீன் அமெரிக்க விழுமியங்களை செழுமையேற்றும் கருவியாகப் பயன்படுத்தினர். ஆயின், ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்யுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்றமகர்க்கு’ என்று எழுதிய வள்ளுவனை, செய்நன்றி மறந்த தோமையரின் சீடராக்க தமிழ் பற்றுள்ள ஒரு பாதிரியால் எப்படி முடிந்தது? தமிழ் விழுமியங்களை கிறிஸ்தவத்தில் ஏற்றிஅதை மேன்மையுறச் செய்வதைவிடுத்து, தமிழ்ப்பண்பாட்டையே ஒரு அரபுக்காரனுக்கு அடிமையாக்க எப்படி இவர்களுக்கு மனது வந்தது? உதாரணமாக ஐரிஷ் கிறிஸ்தவாகப் பிறந்து, விவிலியத்தில் கரை கண்டு, பின் உலக சமயங்களை முறையாக ஆராய்ந்த ஜோசப் கேம்பல் போன்ற அறிஞர்கள் பௌத்ததின், வைணவத்தின் தாக்கம் ஏசுவிடம் இருப்பதாகக் காணுகின்றனரே தவிர நம்மவர் சொல்வது போல் தோமையர் நற்சேதியில் சிவஞான போதமும், திருவாய்மொழியும் இருப்பதாய் சொல்லவில்லை. சங்கத்தின் ஐந்திணைக் கோட்பாட்டில் வரும் கருப்பொருள் உளவியலின் படி பாலை நிலத்தில் ஏசுவின் அன்பு மொழிகள் பொருந்தாத்தன்மை (பாலைக்கு கொற்றவை அல்லது கதிரவனைக் கருப்பொருளாகக் கொள்ளலாமெனும் நச்சினார்க்கினியார் உரை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது) ஏன் நான்கும் கற்ற தமிழ்ப்பாதிரிகளுக்குப் புலப்படவில்லை?
விடுதலைக் கிறிஸ்தவம் என்பது லத்தீனமெரிக்காவின் கூச்சல். அங்கு இன எழுச்சிக்கு, மேன்மைக்கு கிறிஸ்தவம் பயன்படுகிறது. ஆனால், அடிமைக்கிறிஸ்தவம் என்பதே நம்மவரின் கூப்பாடாக உள்ளது. இதன் பாரிய விளைவுகள் பற்றி இவர்கள் சிந்திக்கிறார்களா? பிலிப்பைன்ஸ் நாடு முழுக்கிறிஸ்தவத்திற்கும், ஐரோப்பிய ஆளுமைக்கும் உள்ளான பின் அவர்கள் சரித்திரமே அவர்களுக்குட் தெரியாமல் போய்விட்டது. எந்தவொரு பிலிப்பைன்ஸ் குடியிடமும் கேளுங்கள், ‘உங்கள் சரித்திரம் எங்கு தொடங்குகிறது?’ என்று. ஸ்பானிஷ் காலனித் துவத்திலிருந்து (14ம் நூற்றாண்டு) தொடங்குவார்கள். ” சரி! பல்லவா என்றொரு தீவு உங்களுக்கு உள்ளதே, 10 நூற்றாண்டில் ஸ்ரீவிஜயா பேரரசு (இந்து) இந்தோனீசியாவில் ஆட்சி செய்ததே, அப்போதெல்லாம் உங்கள் குடிகள் எப்படி இருந்தனர்?” என்று கேட்டால், எங்களுக்கு அக்கறை இல்லை என்பார்கள். இது எவ்வளவு பெரிய இழப்பு? சுயபுத்தி இல்லாமல் அடிமைப்படும் குணம் என்றுதானே இதைச் சொல்ல வேண்டியுள்ளது?
சமீபத்திலுள்ள மலேசியாவின் சரிதத்தைப் பாருங்கள். பரமேஸ்வரா என்ற இந்து மன்னன் திருமண உறவு காரணமாக முஸ்லிம் மதமாற்றமுறுகிறான். அதன் பின் மலேசிய நாடே முஸ்லிம் நாடாக மாறுகிறது. அதற்காக அதற்கு முன்னுள்ள இந்து சரித்திரம் அழிக்கப்பட வேண்டுமா? இல்லை என்பார்கள் ஐரோப்பியர்கள். ஆனால் “ஆம்” என்கின்றனர் மலேசியர்கள். கொலம்பஸ் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் அமெரிக்காவில் மெல்ல, மெல்ல அங்குள்ள பழம்குடிகளின் சமய நம்பிக்கைகளையும், சரிதத்தையும் உண்மையான அமெரிக்கச் சரிதமாகக் காணும் போக்கு வளர்ந்து வருகிறது. ஆஸ்திரேலியாவிலும் இதே கதைதான்.
ஆனால் மிகப்பழமை கொண்ட தமிழ் மண்ணில் தன் சிந்தனை மரபே தோமையர் என்ற நன்றி மறந்த ஒரு கிழவன் இந்தியா வந்த பின்தான் உருவாகியது என்பதை மனப்பூர்வமாக, மூர்க்கமான அடிமைக் குணத்துடன் ஏற்றுக் கொள்ளத்தலைப்பட்டுள்ளனர். இதைத் தமிழ் மனதின் உச்சகட்ட தாழ்வுமனப்பான்மையாகக் காணுகிறேன்.
ஆனால் மிகப்பழமை கொண்ட தமிழ் மண்ணில் தன் சிந்தனை மரபே தோமையர் என்ற நன்றி மறந்த ஒரு கிழவன் இந்தியா வந்த பின்தான் உருவாகியது என்பதை மனப்பூர்வமாக, மூர்க்கமான அடிமைக் குணத்துடன் ஏற்றுக் கொள்ளத்தலைப்பட்டுள்ளனர். இதைத் தமிழ் மனதின் உச்சகட்ட தாழ்வுமனப்பான்மையாகக் காணுகிறேன்.