Tuesday 9 September, 2008

நாம் மட்டும் ஏன் இப்படி?

soure:tamilhindu
~ ராஜா ஆர்.எஸ் | நாள்: 2008-09-09 | பார்வை: 47 | அச்சிட

“உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக. திரைக்கு வந்து சில மாதங்களே ஆன…”

அது வினாயக சதுர்த்தி ஆனாலும் சரி, தீபாவளி, பொங்கல் ஆனாலும் சரி அலறத் தொடங்கிவிடும் நம் தமிழ் தொலைக்காட்சிகள். நடிகர், நடிகைகளின் சிறப்பு பேட்டிகள், படம் உருவான கதை, அன்று வெளியாகவுள்ள படங்களின் பாடல்கள் என்று ‘களை’ கட்டிவிடும். ஒரு வாரம் முன்பிருந்தே தொடங்கிவிடும் இந்த ‘அன்புத் தொல்லைகள்’. நம்மவர்களும், எந்த டி.வி.யில் எத்தனை மணிக்கு என்ன பார்க்கலாம் என்று திட்டமே தயாரிக்க அரம்பித்து விடுவார்கள்.

இன்று என்ன பண்டிகை, அதன் முக்கியத்துவம் என்ன என்றெல்லாம் பற்றி நமக்கென்ன கவலை? அதையெல்லாம் பற்றிக் கவலைப்படத்தான் வீட்டில் சில பெரிசுகள் இருக்கிறார்களே. நமக்கு வேண்டியது ஒரு கொண்டாட்டமான விடுமுறை, டிக்கெட் செலவு இல்லாமல் சில படங்கள். “வாழ்க்கையை அனுபவிக்கத்தானே மனிதப் பிறவியும் விழாக்களும்? இதுகூட இல்லைன்னா அப்புறம் என்னையா?”

காலை சுமார் 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் அன்றைய நிகழ்சிகள். ஒரு மங்கல இசை, பஜனை, அருளுரை அல்லது சொற்பொழிவு என்று துவங்கும் நாள் 8.30 மணியானால் ‘சூடு’ பிடிக்கத் தொடங்கிவிடும். அப்போதுதான் நம்மவர்கள் முக்கால்வாசிப் பேர் படுக்கையை விட்டு எழுந்து ஒரு கப் காப்பியோடு டி.வி. முன்னால் ஆஜர் ஆவார்கள். மனுஷன் தூங்கும்போதே இந்த “ஒரு பைசாவுக்கும் உதவாத” மங்கல இசை, சொற்பொழிவு எல்லாம் முடிந்தாக வேண்டும். “அதையெல்லாம் போய் மனுஷன் பார்ப்பானா?”

காலை 8.30 மணிக்கு மேல் அது எந்தப் பண்டிகையானாலும் சரி, நடக்கும் ‘பூஜை’ ஒன்றுதான். தீபாவளி என்றால் கங்கா ஸ்நானம், லக்ஷ்மி பூஜை. வினாயக சதுர்த்தி என்றால் வினாயகர் பிறந்த தினம், பொங்கல் என்றால் உழவர் தினம். இதெல்லாம் பற்றி நமக்கென்ன? “நம்ம தலைவர் படம் எதாவது T.V-ல போடறானா, அதைச் சொல்லு”. கிருஷ்ணர் பிறந்த கதையும், நரகாசுரனைக் கொன்ற கதையும் நமக்குச் சோறு போடுமா? இருக்கவே இருக்கு நமீதாவின் ‘மனம் திறந்த’ பேட்டியும், அவருடைய திரையுலக ‘சாதனை’களும். அதைச் செவிகுளிரக் கேட்டாலே நம் ஜென்மம் சாபல்யம் அடைந்து விடும். சமையலறையில் அம்மா சமையல் முடித்துவிட்டு பூஜைக்கு உட்க்காருவார்கள். அப்பொழுதுதான் நம்ம ஆள் “பண்டிகைகள் சுவையா, சுமையா?” பட்டிமண்றம் பார்த்துக் கொண்டிருப்பார். பூஜை மணி ஓசையை மிஞ்சிக் கொண்டு பட்டிமன்றக் கூச்சல் தெருவில் கேட்கும். பூஜை செய்யும் சில பெரியவர்களுக்கோ எரிச்சல். “இதெல்லாம் இப்போதான் போடுவான். மத்தியானம் போட்டால் என்ன? நான்கூட பார்ப்பேனே!” அவர்களுக்கு அவர்கள் ‘கஷ்ட்டம்’.

சரி. விநாயக சதுர்த்தி என்றால் 24 மணி நேரமும் விநாயகர் பற்றியே நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப முடியுமா? முடியாதுதான். ஆனால் அவரை இப்படி 24 மணி நேரமும் அவமானப்படுத்த வேண்டாமே? ஏன், விநாயகர் பற்றிய பல சுவையான செய்திகளைப் படமாக்கலாமே? சில திருத்தலங்ககளை நேயர்களுக்குக் காட்டலாமே? அரை நாளாவது அன்றைய பண்டிகை தொடர்பான நிகழ்சிகள் இருக்கலாமே? சுதந்திர தினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சுதந்திர தினத்துக்க்கும் சிம்ரனின் வாழ்க்கைச் சரிதத்திற்கும் என்னையா தொடர்பு?

“சொல்லுவதெல்லாம் சரிதான். ஆனால் சினிமா தொடர்பான நிகழ்ச்சிக்களைத்தானே மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்? எங்க வியாபாரம் என்ன ஆவது?” என்று கேட்பார்கள். வருடம் 365 நாட்களும் சினிமாவை வைத்துக் கொள்ளை லாபம் எடுக்கும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு ஒரு சில பண்டிகை நாட்களின் போதாவது லாபத்தைக் கொஞ்சம் விட்டுக் கொடுப்போம் என்ற எண்ணம் வருவதில்லை. மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. நம் பாக்கெட் நிரம்பவேண்டும். போதை மருந்து விற்றுக் காசு சம்பாதிப்பதற்கும் இதற்கும் என்ன பெரிய வித்தியாசம்? இரண்டிலுமே சமூகப் பொறுப்பு என்பது அறவே இல்லையே.

அவர்களை மட்டும் தப்புச் சொல்லி என்ன பிரயோஜனம். நம்ம மஹா ஜனங்களையும்தான் சொல்லி ஆக வேண்டும். சிவராத்திரியோ அல்லது வைகுண்ட ஏகாதசியோ வந்துவிட்டால் இரவு தூக்கம் விழித்தாக வேண்டும். என்ன வழி? இருக்கவே இருக்கு சினிமா தியேட்டர். அன்றுதான் விடிய விடிய நாலு படம் ‘சிறப்புக் காட்சி’ போடுவானே. திருவிளையாடலும், திருமால் பெருமையுமா அங்கே காட்டுகிறான்? அது எந்தக் குப்பையானாலும் பரவாயில்லை. தூக்கம் விழித்தாக வேண்டும். புண்ணியம் கிடைத்து விடும்.

இப்படி கண்டதைப் பார்த்துப் பாவத்தைக் கட்டிக் கொள்வதற்கு பேசாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கலாமே! நாம் தூக்கம் விழிக்காவிட்டால் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஏதாவது குறைந்தா போய்விட்டது?

இதுமட்டுமா? விநாயகர் சதுர்த்தி என்றால் ஊரெல்லாம் வற்புறுத்தி நண்கொடை வாங்கிப் பணம் சேர்க்க வேண்டும். ஒரு விநாயகர் சிலையைத் தெருவில் வைத்து ஒரு பத்து நாள் கூத்தடிக்க வேண்டும். இவர்கள் அலற விடும் ‘பக்தி’ கானங்களைக் கேட்டு அவராகவே போய்க் கடலில் விழாத குறைதான்.

நம் மக்கள் மட்டும் என் இப்படி? மற்ற மதத்தவரைப் பாருங்கள். அவர்கள் பண்டிகையை எவ்வளவு கண்ணியமாக நடத்துகிறார்கள். நோன்பு என்றால் அதை எவ்வளவு சிரத்தையுடன் கடைப்பிடிக்கிறார்கள்? ‘அட அவர்கள் மதத்திலெல்லாம் கண்டிப்பு அதிகம்ப்பா. நம்ம மதத்தில் சுதந்திரம் அதிகம்’ அதற்காக? ஏற்கனவே, இந்தியாவில் நாங்கள் வந்த பின்னர்தான் கல்வியும் நாகரீகமும் வந்தது என்று சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்.

இன்னொரு பக்கம் பச்சை சுயநலம். இந்து கலாசாரத்தில் எதெல்லாம் உயர்ந்த விஷயங்களோ, அதெல்லாம் இன்று கடைச் சரக்காகி விட்டது. ஜோதிடம், யோகாசனம், வாஸ்து சாஸ்திரம், ரத்தின கற்களின் சாஸ்திரம், ஆயுர்வேதம்… இன்னும் எவ்வளவோ. நினைத்துப் பாருங்கள்.. இவை அத்தனையும் சல்லிகூட எதிர்ப்பார்க்காமல் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்றவை. அனால் இப்பொழுது தெருவுக்குத் தெரு இவற்றை வைத்து எத்தனை பேர் பணம் அள்ளுகிறார்கள்? இவர்களில் எத்தனை பேர் தன்னை இந்து என்று மார்தட்டிக் கொள்ளத் தயார்? இந்து மதத்துக்கு ஒரு அவமானம் என்றால் இவர்களில் யாராவது குரல் கொடுப்பார்களா? அல்லது தாங்கள் உபயோகப்படுத்தும் அறிவு இந்து மதத்தின் கொடை என்பதை பிரகடனப்படுத்துவார்களா?

இந்து மதத்தால் என்ன என்ன நன்மை உண்டோ அதெல்லாம் நமக்கு வேண்டும். ஆனால், அதனை கௌரவமாக வைத்துக் காபாற்றத்தான் நம்மில் பலருக்குத் தயக்கம். சுயநலத்தை மறந்து உலகின் சிறந்த மதத்தின் உன்னதத்தை நாம் பெருமையோடு உயர்த்திப் பேசக் கற்கப் போவது எக்காலம்?

No comments: