Friday 6 February, 2009

ஸ்ரீலங்காவில் படுகொலை செய்யப்படும் தமிழ் இந்துக்கள்

tamils-lankaஇலங்கைவாழ் தமிழனின் கதை மிகத் துயரமானது. நெடுங்காலமாக நடந்து வருவது. கண்ணீர்த்துளி வடிவிலிருக்கும் இலங்கை அங்குள்ள தமிழர்களின் குருதித் துளியாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆம், அங்கு நிகழ்ந்து கொண்டிருப்பது இனப்படுகொலை!

அந்த நாட்டின் ஆதிகுடி மக்கள் நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழ் இந்துக்களே. ஆனால் ஆளும் சிங்களவர்கள் கையில் சிக்கி அவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக ஆக்கப்பட்டனர். கல்லூரியில் இடம் கிடையாது. அரசுப் பணி கிடையாது. அடிப்படை வாழ்வாதாரம் கிடையாது. உரிமைகள் மறுக்கப்படுகின்றன. வெளிநாட்டில் புலம் பெயர்ந்தால்தான் அவர்களுக்கு வாழ்வு என்னும் நிலை இன்று.

அதுமட்டுமல்ல, ஓடிக்கொண்டிருக்கும் பஸ் நள்ளிரவில் நிறுத்தப்படும். அதிலிருந்து தமிழர்கள் மட்டும் கீழே இறக்கப்படுவர். இரக்கமின்றிச் சுட்டுக் கொல்லப்படுவர். பஸ் கிளம்பித் தன்வழியே போகும். பஞ்சாபில் காலிஸ்தான் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் இந்துக்களுக்கு நடந்த அதே கதை, அதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே ஸ்ரீலங்காவில் தமிழ் இந்துக்களுக்கு நடந்தது. வரலாற்று ரீதியாக சிங்கள பௌத்த மதக் கோட்பாடுகளில் உதித்து, காலனியத்தால் உருவாக்கப் பட்ட பிரிவினைக் கொள்கைகளில் வளர்ந்து, பின்னர் காட்டுத் தீயெனப் பரவிய சிங்கள இனவாதமும், அத்துடன் இணைந்து கொண்ட பௌத்த மதவெறியும் தமிழ் இந்துக்களை என்றென்றும் தங்கள் ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்று கருதிச் செயல்பட்டதே காரணம். நாம் பேசுவது 50 ஆண்டுப் பழைய கதை. அதை நமது பாரதி பார்த்திருந்தால்

நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே இந்துத் தமிழர் அழுதசொல்
மீட்டும் உரையாயோ? - அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர்

என்று பாடியிருப்பான்.

இந்த அவலமான சூழ்நிலையில்தான் அங்கே பல போராட்டக் குழுக்கள் தோன்றின. ஈழ தேசிய விடுதலை முன்னணி (ENLF), தமிழ் ஈழ விடுதலை அமைப்பு (TELO), ஈழப் புரட்சி மாணவர் அமைப்பு (EROS), தமிழ் ஈழ விடுதலைக்கான மக்கள் அமைப்பு (PLOTE), ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி (EPRLRF) என்று வெவ்வேறு பெயர்களில் ஒரே நோக்கத்துடன் அமைப்புக்கள் தோன்றவேண்டுமானால் மக்கள் எத்தனை துன்பங்களுக்கு ஆளாகியிருக்க வேண்டும்!

தமிழ் நாட்டில் முதல்வரோடு சேர்ந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் முஸ்லிம்கள் அங்கே தம்மைத் தமிழராகக் காட்டிக்கொள்ளவோ, போராட்டத்தில் தோள்கொடுக்கவோ இல்லை. மாறாக, வழக்கம்போல இந்து வழிபாட்டிடங்களை அவமதிப்பதிலும், இந்துக்களைப் புண்படுத்துவதிலும் தமக்கிருந்த ஆர்வத்தையும் திறமையையும் முழுவீச்சில் காண்பித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி வந்தனர்.

தமிழ் இந்துக்கள் முதலில் கேட்டது சமத்துவம்தான், தனி ஈழமல்ல. அதைத் தர மனமில்லாத பௌத்த சிங்களவர்கள் அரசு எந்திரத்தின் மூலம் கட்டற்ற வன்முறையைத் தமிழ் மக்கள் மீது அவிழ்த்து விட்டனர். அரசின் வன்முறை பொறுக்க முடியாத நிலையை எட்டிவிடவே, நிலையில் மேற்கூறிய அமைப்புகள் வன்முறையைக் கையிலெடுத்தன. ‘ஐந்து கிராமமல்ல, ஐந்து ஊசிமுனை இடம்கூடத் தரமுடியாது’ என்று பாண்டவர்களிடம் அடாவடியாகப் பேசி மறுத்த துரியோதனர்களுக்கும் இவர்களுக்கும் சற்று வித்தியாசமில்லாத நிலை ஏற்பட்டது. தமிழ் இந்து சமத்துவக் கோரிக்கை தமிழீழப் போராக மாறியது.

காலக்கிரமத்தில் ஈழ விடுதலை அமைப்புகள் ஒன்றிணைந்தன. தனித்துப் போராடுவோம் என்று சொன்ன போட்டி அமைப்புகளைத் தீர்த்துக்கட்ட பிரபாகரன் தயங்கவில்லை. ‘ஆயுதம் தாங்கிய பெரும் போராட்டமே’ வழி என்று இறங்கிவிட்ட வேலுப்பிள்ளை பிரபாகரனின் செவிகளுக்கு மிதவாதம் கசந்தது. கசப்பதில் தவறில்லை, ஆனால் மிதவாதிகளையும் ஒழித்துக்கட்டுவதே தீர்வு என்றும் கருதினார். தமிழ் மண்ணிலேயே வேறு அமைப்பைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்த் தலைவர்களைப் புலிகள் சுட்டுக் கொன்றது சரித்திரம். படிப்படியாகப் பிற அமைப்புகள் புலிகளோடு சங்கமமாகிவிட்ட பின், ‘ஈழத் தமிழர் பாதுகாவலனாக’ வரித்துக்கொண்ட எல்.டி.டி.ஈ. என்ற வேலியே பயிரை மேய்ந்த கதையும் நிறைய வெளியானதுண்டு.

எண்ணெய்ச் சட்டிக்கும் எரியும் அடுப்புக்கும் இடையே எதைத் தேர்ந்தெடுப்பது என்கிற கேள்விதான் இப்போது.

tamil-refujeesபுலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைக் கருணையற்ற, எந்த வரைமுறைகளுமற்ற தாக்குதலால் கையகப்படுத்திக் கொண்டே வந்த ஸ்ரீலங்கா அரசு, முல்லைத்தீவின் ஒரு சிறிய பகுதிக்குள் அவர்களை நெருக்கிக் கொண்டு சென்று அடைத்திருக்கிறது. நிலவறைகளில் (பங்கர்) புலிகளோடு சாதாரணத் தமிழர்கள் - பெண்கள், முதியவர், குழந்தைகள் உட்பட - பதுங்கியிருக்கிறார்கள். ‘போராளியல்லாதவர்கள் தப்பித்துப் போகட்டும்’ என்று கூறி இரண்டு நாள் போர்நிறுத்தத்தை ராஜபக்சே அறிவித்தார். சாதாரண மக்கள்தாம் தமக்குக் கேடயம் என்பதை நன்குணர்ந்த புலிகள் அவர்களைத் தப்பிப் போகவிடவில்லை. மற்றொன்று, அப்படியே போனாலும், தப்பிவந்த எல்லோரையும் சாதாரண மக்கள் என்று ஸ்ரீலங்கா அரசு நம்பாது. தகவல் பெறுவதற்காக அவர்களில் பலர் கொடுமைப்படுத்தப் படுவார்கள். அந்த அச்சமும் இருந்திருக்கும்.

ஆயிரத்துக்கு அருகிலுள்ள எண்ணிக்கையிலான புலிகளும், ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் குடிமக்களும் இப்போது மீண்டும் வரைமுறையற்ற தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதில் மருத்துவமனைகளும் அடங்கும். மருத்துவமனையைத் தாக்கியதில் 5 பேர் இறந்திருக்கிறார்கள், ஏராளமான பேர் காயமுற்றிருக்கிறார்கள்.

நமக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. சாதாரணமாகப் பசு வதையைக் கண்டிக்கும் இந்து சாத்திரங்களும் ‘தன்னைத் தாக்க வரும் பசுவையும் கொல்லலாம்’ என்று கூறுகின்றன. இன்றைய சட்டமும் அதை அனுமதிக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் LTTE கையில் ஆயுதம் எடுத்தது என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

பிரபாகரன் மலேசியாவில் ஒளிந்து கொண்டிருக்கலாம் என்ற வதந்தி கிளம்பிய உடனே அந்த அரசு “நாங்கள் இந்தியா, ஸ்ரீலங்கா ஆகியவற்றோடு இணைந்து இதை ஆய்வு செய்வோம்” என்று கூறியது. அதன் ஆர்வத்துக்குக் காரணம் பிரபாகரனைப் பிடிப்பதோ, ஸ்ரீலங்காவில் அமைதி கொண்டுவருவதோ அல்ல. மலேசியாவிலும் இந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களது வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மாறாக, மலேசியாவில் தமிழ் இந்துக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் HINDRAF அமைப்புக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக மலேசிய அரசு கருதுவதே காரணம். “எங்களை ஒடுக்குகிறார்கள், உதவி செய்யுங்கள்” என்று ஹின்ட்ராஃப் பிரதிநிதி தமிழகத்துக்கு வந்து கேட்டபோது தோழர் தா. பாண்டியன் “முதலில் உங்கள் அமைப்பின் பெயரில் இருக்கும் ‘ஹிந்து’ என்ற சொல் இருக்கும்வரை உங்களை யாரும் ஆதரிக்கமாட்டார்கள்” என்று அறிவுரை கூறியது நினைவிருக்கலாம். ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழருக்கு விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களை இந்திரா காந்தி அம்மையார் போட வழிசெய்தபோது, “காஷ்மீரில் பாகிஸ்தானோ சவூதி அரேபியாவோ உணவுப் பொட்டலங்களைப் போட்டால் ஒப்புக்கொள்வீர்களா?” என்று கேட்ட அதே புண்ணியவான்தான் இவர்.

tamils-deadஇன்று ஸ்ரீலங்காவில் இந்துத் தமிழன் முழுவதுமாக அழிக்கப்படப் போகிறான் என்ற நிலைமை வந்துவிட்டதோ என்று நம் மனதில் ரத்தம் கசிகிறது. தமிழகத்தில் மழையில் கொண்டுவந்து ஒன்றும் புரியாத மழலைகளை நிறுத்தும் மனிதச் சங்கிலிகளாலோ, தனிமனிதர்கள் தம்மைத் தாமே நெருப்பிட்டுக் கொள்வதாலே ராஜபக்சேவின் மனம் மாறப்போவதில்லை. ‘இங்கே நடப்பது ஹிட்லர் நடத்தியது போன்ற இன அழிப்பு’ என்ற சரியான வாதத்தை, சரியான ஆதாரங்களோடு, தக்க இடத்தில் அமர்ந்திருக்கும் நபர்கள் மூலம், ஐ.நா. சபை உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் எடுத்துக் கூறி, உலக நாடுகளின் கண்களைத் திறக்க தமிழக முதல்வரும் பாரதப் பிரதமரும் முயற்சி எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வெறும் உண்ணாவிரத நாடகங்களும், வீராவேசப் பேச்சுகளும், எரிகின்ற உடல்களில் குளிர்காய்வதும் கணந்தோறும் உயிர்விட்டுக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ் இந்துக்களின் உயிரைக் காக்காது.

No comments: