Monday, 8 December 2008

மும்பை பயங்கரமும் டி.வி. சேனல்களும்

~ வனமாலி நாள்: 2008-12-06 source:tamilhindu

‘Butch Cassidy and the Sundance Kid’ என்ற பிரபலமான திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் திரைப்படத்தின் நாயகர்கள் இருவரும் ஒரு பாழடைந்த கட்டடத்துக்குள் மாட்டிக் கொள்வார்கள். சிறு திருடர்களான அவர்களை எப்போதும் போலிஸ் துரத்திக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு முறையும் போலிஸுக்கு டிமிக்கி கொடுத்துத் தப்பித்து விடும் அவர்களை இந்தமுறை எப்படியாவது பிடித்துவிடவேண்டுமென்று ஒரு பெரிய பட்டாளமே அந்த கட்டடத்தைச் சுற்றிவளைக்கும். வெளியே ஒவ்வொரு அங்குலத்துக்கும் போலிஸ் நிற்பது தெரியாமல் எப்போதும் போல் தப்பித்துவிடலாம் என்று கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வெளியே வருவார்கள் நாயகர்கள் இருவரும். அந்த ஃப்ரேம் அப்படியே உறைந்துபோய், இன்று உலக சினிமாவின் ஒரு முக்கியக் காட்சியாகப் பதிந்துவிட்டது.
ஆனால் Butch Cassidy-யும், Sundance Kid-உம் பாவப்பட்டவர்கள்! அவர்கள் காலத்தில் கட்டடத்தைச் சுற்றி வெளியே என்ன நடக்கிறது என்று லைவ் அப்டேட் கொடுக்க செய்திச் சேனல்கள் இல்லை. ‘இதோ சூழ்ந்துவிட்டார்கள், இந்த போலிஸ்காரர்கள் இப்போது பின்வாசல் வழியே நுழையலாமா என்று நினைக்கிறார்கள்’ என்றெல்லாம் உயிரைக் கொடுத்துக் கத்த அந்தக் காலத்தில் ஒரு பர்க்கா தத் இல்லை. அந்த கட்டடத்தின் வரைபடமோ, அதனைச் சுற்றி எங்கெங்கு போலிஸ் நிற்கிறார்கள் என்பதைக் குறித்து விளக்கும் ஒரு கிராஃபிக்ஸ் வரைபடமோ இருந்திருக்கவில்லை என்பது இன்னும் துரதிர்ஷ்டவசமான விஷயம்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியபோது அவர்களுக்கு போலிஸ், NSG-யின் நடமாட்டம் உடனுக்குடன் செல்ஃபோனில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாதிகளிடம் பத்து இந்திய சிம்கார்டுகள் இருந்தன; அவை புதுதில்லியில் வாங்கப்பட்டு பங்களாதேஷ் வழியாக பாகிஸ்தானுக்குக் கடத்தப் பட்டிருக்கின்றன; தீவிரவாதிகள் வசமிருந்த செல்ஃபோன்களின் பேட்டரி தீர்ந்து போனபோது, தாங்கள் சுட்டுக்கொன்றவர்களிடமிருந்த செல்ஃபோன்களை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவை அத்தனையும் போலிஸிடம் உயிருடன் சிக்கிய ஒரே தீவிரவாதி சொன்ன தகவல்கள்! தீவிரவாதிகளுக்கு இத்தனை தகவல்கள் நம் ஊடகங்களின் உடனடிச் செய்திகளால் கிடைத்ததில் ஒரு கட்டத்தில் அரசே, இந்த ஊடகங்களை சற்று நேரம் அமைதி காக்கும்படி வேண்டிக்கொள்ளுமாறு ஆனது. ஆனாலும் நம் செய்தி ஊடகங்களைப் போர்வீரர்கள் என்றும், பொறுப்பான மகாத்மாக்கள் என்றும் சிலாகித்துக் கட்டுரை எழுதுபவர்கள் இருக்கிறார்கள்!
நாளை இதுபோன்ற புல்லரிப்புக் கட்டுரைகள் கல்கி, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படிக்கும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இடம்பெறும். ஏன், சென்சேஷலிசப் பத்திரிகைகளில் ஒன்றான ஜூனியர் விகடன், தீவிரவாதிகள் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள தங்கள் தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப் பட்டும், அதுவும் ஏன், பிடிபட்ட தீவிரவாதியே தான் ஒரு பாகிஸ்தானி என்று வாக்குமூலம் கொடுத்தும், கூசாமல் மும்பையில் தாக்குதல் நடத்தியது இந்துக்கள் எனக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. தமிழ் ஊடகங்களே இப்படிப் பொறுப்பில்லாமல், விஷமத்தனத்துடன் நடந்து கொள்ளும்போது, உலக ஊடகங்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
பிரபலமான பத்திரிகையான ‘டைம்’, முஸ்லிம்கள் இப்படி அடிக்கடி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக் காரணம் இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அதலபாதாளமான பொருளாதார வேறுபாடு இருப்பதுதான் என்றும், கடும் வறுமையில் இருக்கும் முஸ்லிம்கள் பயங்கரச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள், பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என திட்டமிட்ட பிரச்சாரம் சர்வதேச ஊடகங்களில் திட்டமிட்டுச் செய்யப்பட்டு வருகிறது.
இது எவ்வளவு பெரிய பொய் என்று இந்தியாவின் கிராமங்களை ஒருமுறை சுற்றிப்பார்க்கும் எவராலும் சுட்டமுடியும். முஸ்லிம்கள் உண்மையில் தங்கள் சவக்குழியைத் தாங்களே வெட்டிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். மிகப் பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவதில்லை. பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தித் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். ஆண்களிலும் கல்லூரியைத் தாண்டுபவர்களின் எண்ணிக்கை வெகு சொற்பம். இதற்குப் பொருளாதாரக் காரணங்கள் இல்லை.
இந்தியப் பொருளாதாரத்தில், ஏன், உலகப் பொருளாதாரம் இருக்கும் நிலையில், வீட்டில் ஒருவர் மட்டுமே சம்பாதித்துக் குடும்ப வண்டியை இழுப்பது எவ்வளவு சிரமம் என்பது மத்திய தரத்தினருக்கு நன்றாகத் தெரியும். இதில் அடிப்படை வாதத்தால் உந்தப்பட்டுப் பெண்களைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுத்தபின், வெகு சிரமப்பட்டுக் கல்லூரியை முடிக்கும் இளைஞர்களைக் கொண்டு பொருளாதாரத்தை எப்படி முன்னேற்ற முடியும்? அதே நேரத்தில், பொருளாதார முன்னேற்றத்துக்கு, கல்விக்கு முக்கியத்துவம் அளித்த எத்தனையோ முஸ்லிம் குடும்பங்கள், பொறியியல், வணிகம், மருத்துவத் துறைகளில் நுழைந்து வெகுசிறப்பான நிலைகளுக்கு வந்திருக்கின்றன.
ஒரு வாதத்துக்காக முஸ்லிம்கள் ஏழ்மையான நிலையில் இருப்பதால் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இந்தியாவில் தாழ்நிலையில் இருக்கும் ஏழை இந்துக்கள் எத்தனை அரசு அலுவலகங்களைத் தகர்த்திருக்க வேண்டும்! பல்லாயிரக் கணக்கான ஏழைத் தமிழர்கள் வாழும் மும்பைச் சேரிகள் இந்நேரம் எத்தனை தீவிரவாதிகளை உருவாக்கியிருக்க வேண்டும்?
இவர்கள் சொல்லும் இன்னொரு வாதம் முஸ்லிம்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளும், ஊக்கமும் இந்தியாவில் கிடைப்பதில்லை என்பது. ராமேஸ்வரத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒரு முஸ்லிம் விஞ்ஞானியை ஜனாதிபதியாக்கிப் பார்த்த நாட்டைப் பார்த்துக் கூசாமல் இவர்களால் எப்படிப் பொய் சொல்ல முடிகிறது?
இந்திய தேசம் முழுதும் கொண்டாடும் விளையாட்டான கிரிக்கெட்டில் எத்தனை முஸ்லிம்கள் இருக்கிறார்கள்? இந்திய அணியின் கேப்டனாக இருந்த முகமது அசாருதீன் முஸ்லிம் இளைஞர்தானே! சானியா மிர்ஸாவுக்குத் தொடர்ந்த மிரட்டலும், அச்சுறுத்தலும் வருவது இந்திய அரசாங்கத்திடமிருந்தா, இல்லை இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தா?
அபூர்வமாக பதிலுக்கு இந்துக்களிடமிருந்து வன்முறை கிளம்பினால் தேசமெங்கும் கண்டிக்கப்படுகிறது. ‘நான் ஒரு இந்துவாக இருப்பதற்கே வெட்கப்படுகிறேன்’ என்ற கூக்குரல்கள் கூட அவ்வப்போது எழும்புகின்றன. நம் பத்திரிகைகளும் மை தீரும் வரை கண்டித்துத் தலையங்கங்கள் எழுதிக்கொண்டே இருக்கும். இது போன்ற அறக்கோபம் தொனிக்கும் எதிர்ப்புக் குரல்களில் நூறில் ஒரு பங்கு கூட, இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வெறித்தனத்தின் போது இஸ்லாமிய சமூகங்களிலிருந்தோ, நம் ‘செக்யூலர்’ ஊடகங்களிலிருந்தோ எழுவதில்லை.
ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும்போதும் தவறாமல் பாபர் மசூதி இடிப்பையும், குஜராத் கலவரங்களையும் ஒரு சமநிலைக்காக முன்னணியில் வைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அப்படியானால் 64 முறை இடிக்கப்பட்ட சோமநாதபுரம் (மற்றும் எண்ணற்ற கோவில்களை) இந்துக்கள் காட்டி நியாயம் கற்பிக்கலாமே. பாமினி புத்தர் சிலைகளைத் தகர்த்ததை பௌத்தர்கள் சுட்டிக் காட்டலாம். இதெல்லாம் வாதமே அல்ல. ஆனாலும், ஒவ்வொரு குண்டுவெடிப்புக்கும் நம் ஊடகங்கள் ஏதாவது ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டேயிருக்கின்றன.
நேற்று ஒரு செய்திச் சேனலில் மும்பை குண்டுவெடிப்பைப் பற்றிய ஒரு தொகுப்பு வெளியானது. அதில் பேசிய ஒருவர் சொன்னது: “BJP உண்மையிலேயே தலைகுனிய வேண்டிய நேரமிது. ஏனென்றால் பாபர் மசூதியை இடித்து இதுபோன்ற தீவிரவாதச் செயல்கள் ஆரம்பிப்பதற்குக் காரணமாக இருந்ததே அந்தக் கட்சிதான்!” தொழுகைக்குப் பயன்படாத பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் இந்தியாவில் முஸ்லிம் தாக்குதல்களே நடைபெற்றது கிடையாதா?
இதோ இப்போது மும்பை தாக்குதல்களை நியாயப்படுத்தி, நம் சிறுபத்திரிகைகள் மெல்ல, மெல்லத் தம் ஆஸ்தான எழுத்தாளர்களை வைத்துக் கட்டுரைகள் எழுதிக் குவிக்கும். தவறாமல் அக்கட்டுரைகளில் மோடி, குஜராத், மலேகான் போன்ற வார்த்தைகள் இடம்பெறும். ஒருவேளை இக்கட்டுரைகள் இவர்களைத் துகிலுரித்துக் காட்டிவிடுமோ என்ற அச்சம் இருந்தால், மொத்த குண்டுவெடிப்பையும் மறந்துவிட்டு ஏதாவது மேற்கத்திய எழுத்தாளரின் கதைகளை மொழிபெயர்த்து இப்பத்திரிகைகள் வெளியிடும். இவர்களுக்குத்தான் கட்டமைப்பை விடக் கட்டுடைப்பு அதிகம் பிடித்ததாயிற்றே.
மொத்தத்தில் பொறுப்பில்லாத, கைக்கூலித்தனம் இந்திய ஊடகங்களின் அடையாளமாகிவிட்டது. இருந்திருந்தால், பந்துக்குப் பந்து கிரிக்கெட் விமர்சனம் போல, பயங்கரவாதத் தாக்குதலைக் காண்பித்து விவரித்து, ISI முன்னாள் அதிகாரி ஒருவர் இங்கே செயல்பட்ட வன்முறைக் கும்பலுக்குச் சரியான அழிவுக்கு வழிகாட்ட உதவியிருக்க மாட்டார்கள். இருந்திருந்தால், மத்திய அரசுக் கட்டில் மிக நெடுங்காலமாக உட்கார்ந்திருக்கும் காங்கிரஸ் அரசின் கையாலாகத் தனத்துக்கு எதிரான மக்களின் கோபத்தை ‘அரசியல்வாதிகளின் மீதான கோபம்’ என்று திசைதிருப்பிக் காட்ட மாட்டார்கள்.
இனிமேலாவது பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் திருந்த வேண்டும். இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள்

1 comment:

Anonymous said...

Fantastic, Very well written. The public uprising in Bombay already shows that people are already fuming. History is for us to learn the mistakes. If we don't learn from it, India will face another destruction. It is for us, Hindus, to be aware of these medias and Congress. It is time for us to bury the Congress so deep that it is not possible to dig it out further.